|
இவ்வாரச் சிந்தனைக்கு
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட் சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள் நீதியு மாய்நித்த மாகிநின் றானே. அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்.
25.12.2009 திருமூலர்-திருமந்திரம்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். (479)
செல்வத்தின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை பல வளமும் இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து அழியும்
18.12..2009 திருவள்ளுவர்
என்ன நடந்தாலும் விமர்சிப்பது என்ற மனம் உடையவர்களைத்தான், அந்தஸ்தால் தலைவனாக மாறினாலும், உணர்வாலே அடிமையாக வாழ்பவர்கள் என்று குறிப்பிடுகிறோம். அவர்கள் நரகத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நரகத்திற்குத் தனியாகப் போக வேண்டியதில்லை. அவர்கள் இருக்கின்ற இடமே நரகமாகத்தான் இருக்கும்.
என்ன நடந்தாலும் ஆனந்தப்படுபவர்கள், என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் சொர்க்கத்திற்குத் தனியாகப் போக வேண்டியதில்லை. காரணம் அவர்கள் இருக்கின்ற இடமே சொர்க்கமாக, ஆனந்தபுரியாக இருக்கும்.
11.12.2009 சுவாமி பரமஹம்ஸ நித்யானந்தர்
செவிக்குண(வு) இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். (412)
செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லதபொழுது, அதற்குத் துணையாக உடலை ஓம்புவதன் பொருட்டு வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
04.12..2009 திருவள்ளுவர்
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. (735)
பலவகையாக மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
27.11..2009 திருவள்ளுவர்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (355)
எந்தப் பொருள் எத்தன்மை இயல்போடு தோன்றிய போதிலும் அத்தோற்றத்தை மட்டிலும் கண்டு மயங்காமல் அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு ஆகும். -
20.11..2009 திருவள்ளுவர்
ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இடைவேளை என்பதே கூடாது. அப்படி விட்டுவிட்டுச் செய்யும் பயிற்சிகள், முந்தைய நல்ல பலன்களையும் அடித்துச் சென்று விடும்.அது மட்டுமின்றி உள்ளத்திலிருந்து துரத்தப்பட்ட எதிரிக்கு(தீயஎண்ணங்கள்) மீண்டும் நல்வரவு கூறுவதாக அமைந்துவிடும். சுயநலம், தியாகம் நிறைந்த தொடர்ந்த செயல்களால், மனம் தூய்மை அடைந்தாலன்றி இறைவனின் அருள் கிடைப்பதில்லை.
13.11.2009 பகவான் சாயி பாபா
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. (731)
குறையா விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். -
06.11..2009 திருவள்ளுவர்
அன்பு உணர்வு பொதுவாக எல்லா உயிரினங்களிடமும் காணப்படுகிறது. ஆணைப் பெண் அடையவும், பெண்ணை ஆண் அடையவும் அன்பே வழியாகும். ஆண்-பெண் இருவரும் இயற்கையை அடையவும், அதற்கும் மேலாக இப்பிரபஞ்சத்தை அடையவும் அன்பே வழியாகும். எல்லைகள் அனைத்தையும் கடந்து அன்பு பெருகும் போது, அது உலகையே அரவணைக்கும் தாய்மையாக ஆகிறது.
30.10.2009 மாதா அமிர்தானந்தமயி
மகனே, மனிதன் இயற்கையிலிருந்து வேறுபட்டவனல்ல. அவன் இயற்கையின் அங்கமாவான். உண்மையில் இயற்கையை நாம் பாதுகாக்கவில்லை; இயற்கைதான் நம்மைப் பாதுகாக்கிறது. பூமியில் இயற்கையைச் சார்ந்தே மனிதன் உயிர் வாழ்கிறான். காற்றைத் தூய்மைப்படுத்துதல் நடக்கவேண்டுமெனில் மரம், செடி, கொடிகள் தேவை. சுற்றுப்புறம் தூய்மையை இழக்கும்போது நம்முடைய ஆரோக்கியம் கெடுகிறது; பலவித நோய்களுக்கு அடிமையாகிறோம். இயற்கையில் ஏற்படும் எந்த மாற்றமும் மனிதனைப் பாதிக்கிறது. அதுபோலவே, மனிதனின் செயல்களும், சிந்தனை அலைகளும் இயற்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இயற்கையின் சமநிலை தறவினால் மனித வாழ்வின் சமநிலை தவறும். அதேபோல், மனிதனின் சமநிலை தவறும்போது இயற்கையின் சமநிலையும் தவறும்.
23.10.2009 மாதா அமிர்தானந்தமயி
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. (591)
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?
16.10.2009 திருவள்ளுவர்
அன்பு உணர்வு பொதுவாக எல்லா உயிரினங்களிடமும் காணப்படுகிறது. ஆணைப் பெண் அடையவும், பெண்ணை ஆண் அடையவும் அன்பே வழியாகும். ஆண்-பெண் இருவரும் இயற்கையை அடையவும், அதற்கும் மேலாக இப்பிரபஞ்சத்தை அடையவும் அன்பே வழியாகும். எல்லைகள் அனைத்தையும் கடந்து அன்பு பெருகும் போது, அது உலகையே அரவணைக்கும் தாய்மையாக ஆகிறது.
09.10.2009 மாதா அமிர்தானந்தமயி
ஆணும் பெண்ணும் இணைந்து செயல்புரிந்து, ஆரோக்கியமான அரசை நிறுவ முடியும். ஆனால் இதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையும், திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தையும் அவசியமாகும். பாம்பின் விஷம் மரணத்திற்குக் காரணமாகும். ஆனால், அதே விஷத்தை மருந்தாக்கி ஒரு ஆளின் உயிரைக் காக்கலாம். அதேபோல், நம்முடைய தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றினால், நம்மால் சமூகத்தைக் காக்க முடியும். அன்பு ஒன்றால் தான் தீய எண்ணங்களாகும் விஷத்தை அமிர்தமாக மாற்ற முடியும்.
02.10.2009 மாதா அமிர்தானந்தமயி
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். (62)
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் ஒன்று சேரா
25.09.2009 திருவள்ளுவர்
நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல - எல்லா மனிதரும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால் தெய்வ சக்தியும் உள்ளது. நீ அதில் நம்பிக்கைவைத்தால் திறமையின்மை திறமையாக மாற்றப்பட்டுவிடும், கஷ்டமும் போராட்டமுமே வெற்றியடைவதற்கான சாதனமாகிவிடும்.
மனச்சோர்வு தவறான சக்திகளின் தாக்குதல்களுக்கு கதவு திறக்கும். இதுவே நீ எடுக்க வேண்டிய நிலை "என்னால் முடிந்ததை நான் செய்வேன், உரிய காலத்தில் எல்லாம் நடக்கும்படி பார்த்துக்கொள்ள அன்னையின் சக்தி உள்ளது, இறைவன் உள்ளான்."
கலங்காமல், அமைதியுடனும், நம்பிக்கையுடனும் இருப்பதே சரியான மனப்பான்மை.
18.09.2009 சுவாமி ஸ்ரீ அரவிந்தர்
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. (222)
பிறரிடமிருந்து பொருளைப் பெறுதல் நல்லதாயினும் இரந்து பெறுதல் தீமையானது; மேலுலகம் இல்லையென்றாலும் பிறருக்குக் கொடுத்தல் நன்மையானது.
11.09.2009 திருவள்ளுவர்
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும். (535)
வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்
04.09.2009 திருவள்ளுவர்
எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன? காலையில் எழுந்த உடனே, இனிமையான ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையைவிட்டு எழுப்பவில்லையென்றால், "வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம்!" வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது. முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல் இருப்பது, பூமிக்கு மட்டும் பாரமல்ல, அவருக்கு அவர் பாரம்தான்.
28.08.2009 சுவாமி நித்தியானந்தர்
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். (97)
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
21.08.2009 திருவள்ளுவர்
ஓல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். (472)
தனக்குப் பொருந்தக் கூடிய செயலையும், அதற்காக அறிய வேண்டியவற்றையும் ஆராய்ந்து அறிந்து அதனிடம் நிலைத்து நின்று முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் இல்லை.
14.08.2009 திருவள்ளுவர்
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. (624)
தடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருது போல் விடா முயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்
07.08.2009 திருவள்ளுவர்
நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," இனிமையாய் அணுகுங்கள். இனிமையாய் எல்லாம் அமையும். இது வாக்கல்ல, என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.
31.07.2009 பரமஹம்ஸ நித்யானந்தர்
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். (451)
பெரியோரின் இயல்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறியோரின் இயல்பு அதனையே சுற்றமாகக் கருதித் தழுவிக் கொள்ளும்.
24.07.2009 திருவள்ளுவர்
மனித உணர்விலிருந்து தெய்வ உணர்விற்கு வளர்தல், நமது ஆன்மா மட்டுமின்றி நமது இயற்கைப் பாகங்களும் பூரணமாக தெய்வத்தன்மை அடைதல் - இதுவே நமது யோகத்தின் முழுப் பொருளும். தெய்வீக மனித இனம் அல்லது அதிமன இனத்தின் இலட்சணம் என்ன? குறுகிய புறஞ்செல்லும் அகந்தையை விரட்டிவிட்டு அந்த இடத்தில் இறைவனை அரியாசனம் ஏற்ற வேண்டும். அகந்தையை அகற்ற வேண்டுமானால் ஆசையை விட்டொழிக்க வேண்டும், இப்பொழுதுள்ளதுபோல் ஆசை நிறைவேற்றமே மனித வாழ்வின் நோக்கமாயிருக்கக் கூடாது.
17.07.2009 சுவாமி அரவிந்தர்.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். (538)
சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
10.07.2009 திருவள்ளுவர்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (322)
உள்ள உணவைப் பலரோடு பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததாகும். -
03.07.2009 திருவள்ளுவர்
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். (111)
பகைவர், நண்பர், அயலார் என்னும் வேறுபாடின்றி எல்லோரிடமும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால் நடுவு நிலைமை என்னும் அறம் நன்மையைத் தரும்.
26.06.2009 திருவள்ளுவர்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.
19.06.2009 திருவள்ளுவர்
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (391)
கற்கத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும். அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.
12.06.2009 திருவள்ளுவர்
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரம்புக்கொன் றாங்கு. (532)
நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல், ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்று விடும்.
05.06. 2009 திருவள்ளுவர்
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் (24) வரனென்னும் வைப்பிற்போர் வித்து.
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
29.05.2009 திருவள்ளுவர்
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் (552) கோலொடு நின்றான் இரவு.
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.
22.05.2009 திருவள்ளுவர்
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
தாம் இன்பம் அடைவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு. கற்றறிந்த அறிஞர் மேம்மேலும் அக்கல்வியையே விரும்புவர்.
15.05.2009 திருவள்ளுவர்
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
08.05.2009 திருவள்ளுவர்
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
உணவு கொள்ளாமல் நோன்பு கிடப்பவர் பெரியவர். ஆனால், பிறர் தம்மை நோக்கிச் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
01.05.2009 திருவள்ளுவர்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து.
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) போருக்குச் செல்லாமல் அடங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்வாங்கும் தன்மையது.
24.04.2008 திருவள்ளுவர்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
நன்றாக எண்ணிய பிறகே ஒரு செயலைத் துணிந்து தொடங்க வேண்டும். துணிந்த பின்னர் எண்ணுவோம் என்று கருதுவது குற்றமாகும்.
17.04.2008 திருவள்ளுவர்
உனக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் ஒருவனை விலக்க வேண்டும் என்றால் என்ன செய்கிறாய்? அவன் சொல்லுவதைக் கேட்க மறுத்துவிடுகிறாய், முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு எதையோ பார்க்கிறாய். உனது எண்ணங்களையும் அவ்வாறே நடத்து.
மீண்டும் மீண்டும் உட்கார்ந்து சாந்தி உச்சாடனம் போட வாய்ப்புக்களை உண்டாக்கிக்கொள். உறங்கி எழுந்ததும் முதல் வேலையாக இதைச் செய். அதேப்போல் இரவில் உறங்கப் போகுமுன்னும் செய். இதனால் உனது உடல்நலம் கூட முன்னேற்றமடையும். உணவு கொள்ளச் சில நிமிடங்களுக்கு முன் இதைச் செய். உணவு நன்றாகச் செரிப்பதற்கு இது எவ்வளவு உதவி செய்கிறது என்பதை அறிந்து ஆச்சரியப்படுவாய்.
10.04.2009 அன்னை
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.
ஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்கு பல பிறப்பிலும் காப்பாக அமையும்.
03.04.2009 திருவள்ளுவர்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம் எல்லோர்க்கும் மேன்மை தருவதாக இருப்பதனால், அது உயிரை விடச் சிறந்ததாகச் சாந்றோரால் காக்கப்படும்.
27.03.2009 திருவள்ளுவர்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்.
துன்பம் வரும்போது (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
20.03.2009 திருவள்ளுவர்
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.
13.03.2009 திருவள்ளுவர்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
தன்மேல் நின்று தன்னைத் தோண்டுபவரையும் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வரையும் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும்.
06.03.2009 திருவள்ளுவர்
நமது அஞ்ஞானத்தினால், புறத் தோற்றத்தைக் கொண்டு தவறான முடிவு செய்துவிடுகிறோம்; இரகசியமாக உள்ளே உறையும் இறைவனைக் காணத் தவறிவிடுகிறோம். ஆனால் ஞானிகள் இந்தத் தவற்றைச் செய்வதில்லை. அவர்கள் பார்வை அகங்காரத்தால் மறைக்கப்படாததால் அவர்கள் உண்மையைக் கண்டு கொள்கின்றனர்; இங்கு குறுகிய மனித இயற்கையில் கட்டுண்டிருப்பவனே இறைவனாக நாம் வணங்கும் எல்லையற்ற பரஞ்சோதிப் பொருள் என்பதை அறிகின்றனர். படைப்புகளுக்கு மேல், உலகங்களுக்கு அப்பால், அவனுடைய பரமேஸ்வர நிலையை அவர்கள் உணர்கிறார்கள். அதே சமயம் உலகிடை அந்தர்யாமியாக இருக்கும்போதும் அவன் சர்வேஸ்வரனே என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். உலகில் நானாவிதமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காகத் தன்னிச்சையாகவே இறைவன் தன் சக்திகளைச் சுருக்கிக் கொள்கிறான்.
27.02.2009 சுவாமி அரவிந்தர்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.
தாம் சேமித்து வைத்துள்ள பொருளை பிறர்க்குத் தராமல் வைத்திருந்து பிறகு இழந்து விடும் வன்கண்மை உடையவர் கொடுத்து மகிழ்வதால் உண்டாகும் இன்பத்தை அறியார்கள்.
20.02.2009 திருவள்ளுவர்
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.
பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை
13.02.2009 திருவள்ளுவர்
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
அறிவுடையவர் (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார் (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.
06.02.2009 திருவள்ளுவர்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகல் நேரத்தில் வென்று விடும். அதுபோல் பகைவரை வெல்லக் கருதும் வேந்தர்க்கும் அதற்குத் தகுந்த காலம் வேண்டும்.
30.01.2009 திருவள்ளுவர்
ஒருமைநிலையைக் கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம் முழுமையான ஒருமைநிலை கிட்டியதும் விஞ்ஞானம் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டிவிட்டது. அதுபோலவே, எந்த மூலப்பொருளிலிருந்து எல்லா பொருட்களும் படைக்கப்படுகின்றவோ, அதைக் கண்டுபிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூல சக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படுகின்றனவோ, அதைக் கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டுபிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், மத விஞ்ஞானம் பூரணமாகிவிடும்
23.01.2009 சுவாமி விவேகானந்தர்
துன்பமயமான உலகைப் படைத்தவர் கொடியவர் என்று சிலர் நினைக்கிறார்கள். பணக்காரர்கள் சொகுசாக வாழும்போது மற்றவர்கள் வறுமையில் வாடுவது நியாயமா என்று பலர் வருந்துகிறார்கள். இதுவா கடவுளின் கருனை? ஏன்று பலரும் மனம் நொந்து கொள்கின்றனர். உண்மையில் கடவுள் சோதனைகளை மட்டுமே கொடுக்கும் கொடியவர் அல்ல. அவர் கருணை வடிவானவர். நியாயமான ஆசைகளைக் கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு கடவுளின் கருனை என்றைக்கும் உண்டு. பேராசை கொண்டு அலையாதீர்கள். தர்மநெறிமுறைகளை பின்பற்றி சத்திய வழியில் நடப்பவர்களை கடவுள் நிச்சயம் கரைசேர்க்க தவறுவதில்லை. வேகத்துடன் எதையும் அணுகாதீர்கள். விவேகத்தை வளர்த்து கொள்வது பலவழிகளில் நமக்குத் துணை செய்யும்
|