Skip to content Skip to sidebar Skip to footer

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா?

இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் அடிமைப்படும் அளவிற்கு பயம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானேயானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும், பயமும் இணைந்து இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப்படக்கூடாது. பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்.; பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள். இப்படி தண்டனைக்கு பயந்து இறைவனை வழிபடுவது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும்? பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு!…கடவுள் மீது நாம் கொள்கின்ற பயம் மதத்தின் துவக்கமே; அவர்மீது கொள்ளும் அன்பே மதத்தின் முடிவு. இங்கு பயம் அனைத்தும் ஓடிவிட்டது. அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்தி வாய்ந்தவரா, ஓர் எல்லைக்கு உட்பட்டவரா, உட்படாதவரா என்ற கேள்விகளுக்கும் இங்கே இடமில்லை. அவர் நல்லது செய்தால் நல்லது. தீமை செய்தாலும் அதனால் என்ன? எல்லையற்ற அந்த அன்பைத் தவிர மற்ற எல்லா குணங்களும் மறைகின்றன…கடவுளே அன்பு, அன்பே கடவுள்…தெய்வீக அன்பாக மாறிவிடுவதுதான் உண்மையான வழிபாடு..அன்பின் உருவமாக எண்ணி அவரை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். இது ஒன்றே அவரைப் பற்றிய விளக்கம்…தகப்பன் அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது செலுத்தவேண்டும்…கடவுள்மீது நாம் அன்பு செலுத்த வேண்டிய முறை இதுவே: எனக்கு செல்வம் வேண்டாம், உடைமை வேண்டாம், கல்வி வேண்டாம், முக்தியும் வேண்டாம்…ஆனால் ஒன்றுமட்டும் அருள்வாய் நான் உன்னை நேசிக்கவேண்டும். அதுவும் அன்பிற்காக அன்பு செலுத்த அருள்வாய்…இறைமகிமை ஓங்கட்டும்! அன்பின் வடிவான அவன் புகழ் ஓங்கட்டும்!

What's your reaction?
0Cool0Bad0Happy0Sad

Add Your Comment

அருள்மிகு சிவன் கோவில்.
Industriestrasse 34
CH-8152 Glattbrugg
Switzerland.

ஆலயம் திறத்திருக்கும் நேரம்

காலை 09:00 மணி முதல் 14:00 மணி வரை.

மாலை 17:00 மணி முதல் 21:00 மணி வரை.

பூசை நேரங்கள்

காலை 09:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 19:00 மணிக்கு .

சிறப்பு நாட்களில் நேர மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அருள்மிகு சிவன் கோவில் © 2023. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
மொழியை மாற்ற »