|
இவ்வாரச் சிந்தனைக்கு
2009ம் ஆண்டின் சிந்தனைகள்.. - 2008ம் ஆண்டின் சிந்தனைகள்..
ஒருமுறை மகானான சந்நியாசி ஒருவர் தோளில் சுமையுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் கூட்டம் அவர் அருகில் சென்று அவரிடம் "சந்நியாசம் என்றால் என்ன?" என்று கேட்டது.
உடனே சந்நியாசி தன் தோளில் வைத்திருந்த சுமையைக் கீழே வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
இளைஞர்கள் அவர் பின்னாலேயே சென்று, "இதன் பொருள் என்ன?" என்று கேட்டனர்.
சந்நியாசி, "காணவில்லையா? நான் சுமையைத் தரையில் இறக்கிவைத்தேன். முதலில் "நான், எனது" என்ற மனோபாவத்தைத் துறப்பதுதான் சந்நியாசம்" என்றார்
27.08.2010 மாதா அமிர்தானந்தமயி
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
20.08.2010 திருவள்ளுவர்
இயற்கையின் ஒவ்வொரு காட்சியையும் கவனியுங்கள். அவற்றிலிருந்து நாம் கற்பதற்கு எத்தனை எத்தனை பாடங்கள் உள்ளன! அவற்றிலிருந்து பாடங்களைப் புரிந்துகொண்டால் போதும், வாழ்வு ஆனந்தமயமாகும். ஒரு நதியைப் பாருங்கள், இமயத்தின் உச்சியிலிருந்து கீழ்நோக்கிப் பெருகி வந்து, சகலரையும் தழுவித் தாலாட்டியபடி கடலில் சென்று சங்கமமாகிறது. அதுபோல் நமது ஜீவாத்மா, பரமாத்மாவிடம் சென்று இணைய வேண்டும்
13.08.2010 மாதா அமிர்தானந்தமயி
ஒரு மரத்தை வெட்டினால், பத்துச் செடிகளை நடவேண்டும் என்று கூறுவர். இதில் பொருள் இருக்கிறதா? கட்டடத்தின் தேக்குமரத் தூண்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் தீக்குச்சிகளை வைப்பது போன்றதாகும். ஒரு பெரிய மரம் சுற்றுப்புறத்திற்கு நல்கும் தூய்மையையும், குளுமையையும் பத்து அல்லது நூறு சிறிய செடிகளால் தரமுடியாது. ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் அதற்குப் பதில் ஒரு மரக்கன்றை நட்டு அது ஓரளவு வளர்ந்து பெரிதாகும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு பெரிய மரம் இயற்கைக்குக் கொடுக்கின்ற சமநிலையைச் சிறிய செடியால் தரமுடியாது. ஒரு வாளித் தண்ணீரில் ஒரு ஸ்பூன் குளோரின் கலந்தால்தான் நீர் தூய்மையாகும் என்றிருக்க, அதன் நூறில் ஒரு பங்கை மட்டும் கலப்பதால் பலன் என்ன? மரங்களின் அழிவு மனித இனத்தின் அழிவாக இருக்கும். பழங்காலத்தில் காணப்பட்ட பல உயிரினங்கள் இன்று பூமியிலிருந்து அடியோடு துடைத்து நீக்கப்பட்டுவிட்டன. அவற்றால் மாறுபட்ட பருவநிலையில் வாழ முடியவில்லை. அதுபோல் இன்று நாம் இயற்கையைக் கவனிக்கவில்லை என்றால், நாளை நமது நிலையும் இதுதான். பருவநிலையுடன் இணைந்து செல்ல முடியாது. வம்சம் அழியும். மனிதனின் சுயநலம் அந்த அளவு வளர்ந்துவிட்டது.
06.08.2010 மாதா அமிர்தானந்தமயி
பழங்கால வீடுகளில் எல்லாம் பூஜையறை இருக்கும். ஒரே அறையுள்ள குடிசையில் வாழ்பவர் கூட ஒரு மூலையில் இறைவனின் படத்தை வைத்து விளக்கு ஏற்றி வழிபடுவர். தினசரி பூஜைக்காக வீட்டில் பூச்செடிகளை வளர்ப்பர். அவற்றைப் பக்தியுடன் பாதுகாப்பர். தானே நட்டு வளர்த்த செடிகளில் உள்ள பூக்களால் அர்ச்சனை செய்யும்போது பக்திபாவம் அதிகரிக்கும். மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் அர்ச்சனையின் பலனாக எண்ணங்களின் எண்ணிக்கை குறையும். அது மனதூய்மைக்குக் காரணமாகிறது. அதுமட்டுமல்ல, ஆயுளும், ஆரோக்கியமும் வளர்கிறது.
30.07.2010 மாதா அமிர்தானந்தமயி
அநியாயம். பொய்மை. அதர்மம. இவற்றால் எல்லாம் சூழப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குண நலன்களை மீட்டு வந்து நிலை நாட்ட இளைஞகளாலும். யுவதிகளாலும் மட்டுமே முடியும். மனிதன் நேர்மையைப் போற்றி அதன் வழி நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகிய சமுதாயத்தில் நிலவும். நேர்மையை தன் வழிமுறையாகக் கொள்ள வேண்டு மானால் மனிதன் சத்யத்தை ஒட்டி நடக்க வேண்டும். இதனால் தான் ஸத்யம் ப்ருயாத் எனக் கூறுகிறார்கள். இது தான் மனிதனின் தலையாய கடமை. இரண்டாவது, ப்ரியம் ப்ருயாத் (இனிமையாகப் பேசுங்கள்). இது தர்மம் என்னும் குண நலனைக் குறிக்கிறது.
23.07.2010 பகவான் சத்ய சாயி பாபா
இவ்வுலகின் எதிர் காலம், நன்மையோ அன்றித் தீமையோ - எதுவானாலும் உங்களது நடத்தையைப் பொறுத் தே அமையப் போகிறது. இவ்வுலகம் பாதுகாப் பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வள மாகவும் இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும் ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். இவ்வுலகத் திற்குத் தற்போதய தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும் அல்ல, மேன்மையான குணங்களும், நல் ஒழுக்கமும் நிறைந்த ஆடவரும், பெண்டிரும் தான். சரியான வழிமுறைகளில், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகு மானால் நாடு துண்டு துண்டாகச் சிதறிவிடும்.
16.07.2010 பகவான் சத்ய சாயி பாபா
"என் செயலாவது யாதென்று மில்லை" என்றும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.
09.07.2010 சுவாமி இராமகிருஷ்ணர்
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப(து) அறிவு. (422)
மனத்தை அது சென்ற இடங்களில் செல்ல விடாமல், தீமையானவற்றிலிருந்து நீக்கிக் காத்து, நன்மையானவற்றில் மட்டுமே செல்லவிடுவதே அறிவு ஆகும்
02.07.2010 திருவள்ளுவர்
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கைக்குத் தெரியும். இயற்கைப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதன் இயற்கையைச் சுரண்டுகிறான். பறவைகளும், மிருகங்களும் காட்டில் ஆனந்தமாக வாழ்கின்றன. அவற்றின் ஒரே எதிரி மனிதன்தான். இயற்கையை அழிப்பதன் மூலம் மனிதன் தனக்குத்தானே எதிரியாக மாறி இருக்கிறான். ஒரு மரத்தைக் கோடாரியால் வெட்டும்போது, அதன் மூலம் தனக்குச் சவக்குழி தோண்டுவதை அவன் நினைத்துப் பார்ப்பதில்லை.
11.06..2010 மாதா அமிர்தானந்தமயி
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். (291)
வாய்மை எனக் கூறப்பெறுவது எது என்றால் அது பிறருக்குத் தீங்கு பயக்காத சொல்லைச் சொல்லுதல் ஆகும்.
04.06.2010 திருவள்ளுவர்
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின். (116)
தன் நெஞ்சம் நடுவுநிலைமையினின்று நீங்கி தவறு செய்ய நினைத்தால் அந்நினைப்பு அவர் கெட்டுப் போவதற்கு அறிகுறியாகும்.
29.05.2010 திருவள்ளுவர்
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. (495)
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும். ஆனால் நீரிலிருந்து நீங்கி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்
21.05.2010 திருவள்ளுவர்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. (431)
செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருஞ்செல்வம் சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்.
14.05.2010 திருவள்ளுவர்
மக்களின் ஒத்துழைப்பின்றி அரசாங்கம் மட்டும் நினைத்தால் ஒன்றும் நடக்காது. அவ்விதம் நடக்க வேண்டுமெனில் அது மக்களின் மனமறிந்து செயல்படும் அரசாங்கமாக இருக்க வேண்டும். நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் லட்சியம், அதிகாரமும், பொருள் ஈட்டுவதுமாக இல்லாமல், மக்கள் மற்றும் நாட்டுநலனாக இருக்க வேண்டும். அவர்களிடமும் தர்ம சிந்தனையை வளர்க்க இறை நம்பிக்கை ஒன்றால்தான் முடியும். மடாதிபதிகளுக்கே இன்று ஆன்மிகக் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.
07.05.2010 மாதா அமிர்தானந்தமயி
வானத்தில், ஒரே ஒரு சூரியன் தான் உள்ளது. ஆனால் அதன் பிரதிபிம்பங்களை, பல ஆறுகள், குளங்கள், பாத்திரங்கள் முதலியவற்றில் உள்ள நீரில் காணலாம். சூரியன் ஒன்றே தான். எங்கெல்லாம் நீர் இருக்கிறதோ அங்கெல்லாம் அது பிரதிபலிக்கிறது. ஒரு தட்டில் நீரை ஊற்றி வையுங்கள், அந்த நீரில் கூட சூரியன் பிரதிபலிப்பதை நீங்கள் காணலாம். அப்படியென்றால் சூரியன் அந்த நீரில் உள்ளதா? இல்லை. இல்லை. அது சூரியனின் பிரதிபலிப்பே. அதே விதமாக ஆத்மா என்பது ஒன்றுதான். மனம், புத்தி, சித்தம், அகம்பாவம், எல்லாம். வித்தியாசமான பாத்திரங்கள் போன்றவை. ஆகவே தெய்வீகம் ஒன்றுதான்.
30.04.2010 பகவான் பாபா
நாம் யாரும் வேண்டுமென்றே நமது கையையோ, காலையே காயப்படுத்த மாட்டோம். அதனால் நமக்கு வலிக்கும் என்பது தெரியும். இதுபோல் சராசரம் முழுவதும் ஒரே ஜீவ சைதன்யமே உள்ளது என்று உணரும்போது பிறருடைய வேதனையும், தனது வேதனையாகத் தோன்றும். அவரைக் காப்பதற்கு மனம் வரும். அவசியமின்றி ஒரு உயிருக்கும் துன்பம் விளைவிக்கத் தோன்றாது.
23.04.2010 மாதா அமிர்தானந்தமயி
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். (64)
தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்துசேரும்.
16.04.2010 திருவள்ளுவர்
என்ன நடந்தாலும் விமர்சிப்பது என்ற மனம் உடையவர்களைத்தான், அந்தஸ்தால் தலைவனாக மாறினாலும், உணர்வாலே அடிமையாக வாழ்பவர்கள் என்று குறிப்பிடுகிறோம். அவர்கள் நரகத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நரகத்திற்குத் தனியாகப் போக வேண்டியதில்லை. அவர்கள் இருக்கின்ற இடமே நரகமாகத்தான் இருக்கும்.
என்ன நடந்தாலும் ஆனந்தப்படுபவர்கள், என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் சொர்க்கத்திற்குத் தனியாகப் போக வேண்டியதில்லை. காரணம் அவர்கள் இருக்கின்ற இடமே சொர்க்கமாக, ஆனந்தபுரியாக இருக்கும்
09.04.2010 பரமஹம்ஸர்
மதம் வெறும் குருட்டு நம்பிக்கை என்று சொல்பவர்கள் அதன் ஆசாரங்களின் பின்னே உள்ள சாஸ்திர தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மத தத்துவங்கள் ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந்தவருக்காக மட்டும் கூறப்படுபவை அல்ல. எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் தேவையானது அதில் உண்டு. சிறு குழந்தைகளுக்குத் தேவையானதும், பத்து வயதுச் சிறுவனுக்கு வேண்டியதும், இளைஞனுக்குப் பொருந்துவதும், நூறு வயதுள்ள கிழவருக்குத் தேவையானதும், பைத்தியக்காரர்களுக்கும், அறிவாளிகளுக்கும் தேவையானவையும் சாஸ்திரங்களில் உள்ளன.
02.04.2010 மாதா அமிர்தானந்தமயி
வாழ்வை எதிர்த்தாலே போதும், வாழ்வு அவரை எதிர்க்கும். வாழ்வை வரவேற்றால், அவரை.... வாழ்வு வரவேற்கும்.
எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.
வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.
பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.
இனிமையாய் அணுகுங்கள். இனிமையாய் எல்லாம் அமையும். இது வாக்கல்ல, என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.
வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.
26.03.2010 பரமஹம்ஸர்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் ஆளப்படுவான்
19.03.2010 திருவள்ளுவர்
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (442)
நாட்டிற்கு வந்துள்ள துன்பத்தை நீக்கி, மேலும் துன்பம் நேராதபடி முற்படக் காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ள வேண்டும்.
12.03.2010 திருவள்ளுவர்
இறைவன் எப்போதும் கருணை பொழிந்து கொண்டிருக்கிறார். அதை முறையாகப் பயன்படுத்துமாறு மதம் கூறுகிறது. பகல் வேளையில் கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு, அறைக்கு உள்ளே இருந்துகொண்டு, இருளாக இருப்பதாகக் கூறி சூரியனைப் பழி சொல்வதால் பயனேதுமில்லை. கதவைத் திறந்து, நாம் ஒளி உலகிற்கு வரவேண்டும். அதற்கு இறைவன் தந்த ஆரோக்கியமும் இருக்கிறது. சிலர், "நமது மனோவாசனைகளை அடக்குவது தவறு, மனவாசனைகளுக்கேற்றவாறு செயல்பட வேண்டும்" என்று கூறுவர். ஒருவன் அடுத்த வீட்டுக்காரனைக் கொல்ல விரும்பக் கூடும். அந்த மனோவாசனைக்கேற்ப நடக்க அவன் தீர்மானித்தால், அதன் பலன் என்னவாக இருக்கும்? எனவே, மனோவாசனைகளைச் சரியான பாதையில் திருப்பிவிட முயல வேண்டும். இறைவன் மீது பயபக்தி வேண்டும் என்று கூறுவது அதற்குத்தான்.
05.03..2010 மாதா அமிர்தானந்தமயி
உண்மையில் நமது மனதை இறைவனுக்குச் சமர்ப்பிக்குமாறுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால், மனம் என்பது எடுத்துக் கொடுக்கக்கூடிய ஒரு பொருளல்ல. அதனால் மனம் எதை மிகவும் விரும்புகின்றதோ, அதைச் சமர்ப்பிக்கும் போது மனதைச் சமர்ப்பிப்பதற்குச் சமமாகிறது. அதுவே யாகங்களின் போது செல்வத்தைத் தானம் செய்வதன் தத்துவம். மனிதனின் மனம் செல்வத்தையல்லவா அதிகம் விரும்புகிறது?
ஒவ்வொருவரும் அவரவர் அறிந்த விதத்தில், தங்கள் இயல்புக்கேற்ப இறைவனை வழிபட்டனர். ரிஷிகள் தேவியைத் தூய சத்துவ வடிவமாகக் கொண்டு வணங்கினர். பணத்தை விரும்பியவர்கள் லஷ்மியாக, செல்வத்தின் தேவதையாகக் கண்டனர். மாணவர்கள் சரஸ்வதியாக எண்ணி வழிபட்டனர். போர் வீரர்களும், காட்டுவாசிகளும் காளியாக வாளும், சூலமும் ஏந்தியவளாகத் தேவியை வணங்கினர். எல்லாம் ஒரே சக்திதான். ஒவ்வொருவரும் தங்கள் மனோபாவத்திற்கேற்ப அதற்கு வடிவம் கொடுத்தனர். எல்லாம்வல்ல இறைவனால் எந்த வேடமும் அணிய முடியும்.
26.02.2010 மாதா அமிர்தானந்தமயி
நமது எல்லாச் செயல்களிலும் பயபக்தியைக் காணலாம். பயம் இருப்பதால்தான் நாம் எதையும் கவனமாகச் செய்கிறோம். இல்லாவிடில், நமக்குச் சிரத்தை வருவது கடினம். நடக்கும்போது கவனமாக இருப்பது, விழுந்துவிடுவோம் என்ற பயத்தால் ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் இயல்புக்கேற்ப மனதில் தோன்றியதைப் பேச ஆரம்பித்தால், அனாவசியமான பலவற்றைப் பேச நேரிடும். அது பின்னர் வழக்கானால் சிறைக்குச் செல்ல நேரிடும். அந்தப் பயத்தால் பேச்சிலும், செயலிலும் கவனம் செலுத்துகிறோம். சிரத்தையுடன் படிப்பது தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால்தான். இப்படிப் பார்த்தால் ஒவ்வொரு நிமிடமும் நாம் பயந்துதான் வாழ்கிறோம்.
19.02.2010 மாதா அமிர்தானந்தமயி
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. (732)
மிக்க பொருள்வம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய் மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
12.02.2010 திருவள்ளுவர்
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். (937)
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
05.02.2010 திருவள்ளுவர்
உண்மையான பக்தன் இறைவனின் நோக்கத்தை உணர்ந்து, அதற்கேற்பச் செயல்படுவான். இடதுகை காயமடைந்தால் வலதுகை ஆறுதல் அளிக்க வருவதுபோல், பிறரது துயரைக் கண்டு, தன்னை மறந்து உதவ ஓடிச்செல்லும் மனோபாவம் அவனுக்கு இருக்கும். உண்மையான ஆத்திகன் இயற்கையையும், மனிதரையும் இறைவனின் பிரத்யட்ச வடிவமாகக் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யவும், அன்பு செலுத்தவும் செய்கிறான். அவன் யாரையும் தன்னிலிருந்து வேறுபட்டவராகக் காண்பதில்லை. பிறரது குற்றம், குறைகளைக் காணாமல், பிறரது தவறுகளை மன்னிக்கும் திறனுள்ள இதயத்தில்தான் இறைவனால் வசிக்க முடியும்
29.01.2010 மாதா அமிர்தானந்தமயி
மேலெழுந்தவாரியான விஷயங்களைப் பார்க்காது விஷயங்களின் சத்தான அம்சத்தைக் காண அவர்கள் கற்றுக்கொண்டால், தோற்றங்களில் கவனம் செலுத்தாது ஆழ்ந்துசென்று உள்ளே மறைந்து கிடக்கும் உண்மையைக் காணும் பயிற்சிபெற்றல், வாழ்க்கையின் இரைச்சலுக்கு செவிசாய்க்காது அதன் மோனத்திற்கு செவிசாய்த்தல் அவை எதிர்பாராதவைகளாக இரா.
செயல்படுவதற்கு நாம் கடும் முயற்சி எடுக்கும்போது இயற்கை சக்திகள் தங்கள் விருப்பம்போல் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. நாம் அசைவற்ற மோன நிலையில் இருக்கும்போது அவை நமக்கு அடங்கி நிற்கின்றன. இது ஒரு இயற்கை விதி.
22.01.2010 சுவாமி ஸ்ரீ அரவிந்தர்
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. (591)
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?
15.01.2010 திருவள்ளுவர்
அமைதியிலேதான் உண்மையான ஞானம் தோன்றும். மனிதனின் சிந்தனை மெய்யும் பொய்யும் பின்னிய ஒன்று. மெய்ப்பார்வையின் மீது பொய்ப்பார்வையின் இருள் படிகின்றது; சரியான அளவிடுதலை தவறான அளவிடுதல் முடமாக்குகின்றது. சரியான ஞாபகத்தை தவறான ஞாபகம் ஏமாற்றுகின்றது.
மனத்தின் சலித்தல் நிற்கவேண்டும், சித்த சுத்தி ஏற்படவேண்டும். அப்பொழுது அலைபாயும் பிரகிருதி மீது ஒரு மோனம் இறங்குகின்றது. அந்த மோன அமைதியில் மனத்தில் ஞானோதயம் உண்டாகிறது. தவறு விலகத் தொடங்குகிறது.
08.01.2010 சுவாமி ஸ்ரீ அரவிந்தர்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான உண்டிவ் வுலகு. (571)
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.
01.01.2010 திருவள்ளுவர்
|